தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.26¾ கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட அதிகம்


தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.26¾ கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட அதிகம்
x
தினத்தந்தி 16 Nov 2020 10:28 AM IST (Updated: 16 Nov 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் ரூ.26¾ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

தஞ்சாவூர்,

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. குடிமன்னர்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 156 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.5½ கோடி வரை விற்பனை நடைபெற்று வருகிறது. பண்டிகை காலங்களில் மட்டும் அதுவும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் இதன் விற்பனை 2 மடங்கு வரை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்றும் அதற்கு முதல் நாளும் என ரூ.14½ கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் ரூ.9 கோடிக்கும், தீபாவளி பண்டிகை அன்று ரூ.8½ கோடிக்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகம் ஆகும்.

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாளில் மட்டும் ரூ.17½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சராசரியாக விற்பனை நடைபெறுவதை காட்டிலும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் கூடுதலாக ரூ.3½ கோடிக்கும், தீபாவளி பண்டிகை அன்று கூடுதலாக ரூ.3 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் ரூ.4 கோடியே 62 லட்சத்துக்கும், தீபாவளி அன்று ரூ.4 கோடியே 68 லட்சத்துக்கும் மதுபானம் விற்பனையானது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.9 கோடியே 30 லட்சத்துக்கு மதுபானம் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ரூ.7 கோடியே 62 லட்சத்துக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.

Next Story