அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை புதிய கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பேட்டி


அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை புதிய கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2020 10:45 AM IST (Updated: 16 Nov 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் கலெக்டராக பணியாற்றி வந்த வீரராகவராவ் வேலைவாய்ப்புத்துறை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வீரராகவராவிடம் இருந்து தனது பணி பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.

புதிய கலெக்டராக பணிஏற்ற பின்னர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தின் 23-வது கலெக்டராக பணி ஏற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசு ஏராளமான மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய முன்னுரிமை அளித்து செயல்படுவேன். இங்கிருந்து செல்லும்போது இதில் மனநிறைவு பெற்றுதான் செல்வேன். கொரோனா நோய் பரவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் 2-வது அலை வந்துவிடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் தொழில்வளர்ச்சி கிடைத்தால் முன்னேற்றமடையும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்குரிய சாத்தியக்கூறுகள் ஆராய்வது தொடர்பாக எனது உழைப்பு நிச்சயம் இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி முக்கியத்துவம் பெறும் வகையில் செயல்படுவேன்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்ததும் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற திட்டம் வைத்துள்ளேன். அதனை செயல்படுத்தி மாவட்டத்தில் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பேன். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட துணை கலெக்டராக பணியை தொடங்கி 2004-2006 வரை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தலை நடத்தியவர். 2007-ல் மதுரை மேற்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாகவும், 2009-11 ஆண்டு வரை மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2011-12-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், 2012-13-ல் தஞ்சாவூர் சுகர் மில்ஸ் மூத்த செயல் அலுவலராகவும், 2013-15-ம் ஆண்டு வரை அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு பிரிவில் வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார். 2015-17 முதல்-அமைச்சர் அலுவலக துணை செயலாளராகவும், 2017-ல் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று மறுவாழ்வு துறை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

இதன்பின்னர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கலெக்டரின் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் என்பதும் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு அரசு உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story