செந்துறை அருகே பா.ம.க.- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மோதல்; தடுக்க முயன்ற போலீஸ்காரர் மண்டை உடைப்பு போலீஸ் நிலையம் முற்றுகை; 8 பேர் கைது
செந்துறை அருகே பா.ம.க.- தமிழக வாழ்வுரிமை கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் மண்டை உடைந்தது. இதையடுத்து மாவட்ட செயலாளரை கைது செய்ததால் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் உலக சாமிதுரை. இவர் பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு பா.ம.க.வினர் சாமிதுரை வீடு அருகே ஒரு பகுதியிலும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாமிநாதன் வீட்டிற்கு முன்பும் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், பா.ம.க. தரப்பினரை கலைந்து போக கூறினார். இதைத்தொடர்ந்து பா.ம.க.வினர் இலைக்கடம்பூரில் இருந்து செந்துறை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது சாமிநாதன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்ததால் தங்களது வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் உருட்டு கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற தனிப்பிரிவு போலீஸ்காரர் துரைமுருகன் மண்டை உடைந்தது. அவரை போலீசார் மீட்டு உடனடியாக செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் உள்ளிட்ட போலீசார், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உலக சாமிதுரை, நமங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டுராஜா, ஒன்றிய பா.ம.க. செயலாளர் ராஜா ஆகியோரை திடீரென கைது செய்து, அரியலூர் கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநில பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில், பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து செந்துறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட போலீசார் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார்கள் என்றும், மாவட்ட பா.ம.க. செயலாளர் உள்ளிட்ட 3 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை நேரடி மோதலில் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உலக சாமிதுரை உள்ளிட்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சாமிநாதனின் மாமியார் சரஸ்வதி(வயது 50) கொடுத்த புகாரின்பேரில் பா.ம.க.வை சேர்ந்தவர்களான வயலூரை சேர்ந்த டீசல் ராஜா(33), கணேசன்(42), செந்துறையை சேர்ந்த கருப்பையா மகன் விஜய்(19), பெரியாக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வம்(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அதேபோன்று செந்துறை வடக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்களான இலைக்கடம்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(26), ஆண்டவர் மகன் வெற்றிவேல்(29), அகரத்தை சேர்ந்த முத்லீப் மகன் முகமது ரியாஸ்(24), வேலு(45) ஆகிய பேரை செய்தனர்.
இதையடுத்து 8 பேரையும் செந்துறை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போன்று தனிப்பிரிவு போலீஸ்காரர் துரைமுருகன் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ம.க. மாவட்ட செயலாளர் திடீரென கைது செய்யப்பட்டதன் காரணமாக செந்துறை பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story