பெரம்பலூரில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்


பெரம்பலூரில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
x
தினத்தந்தி 16 Nov 2020 7:42 PM GMT (Updated: 16 Nov 2020 7:42 PM GMT)

பெரம்பலூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

பெரம்பலூர், 

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்கு கரையில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே அய்யப்ப சாமி கோவிலுக்கு வந்தனர்.

முதன்முதலில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் கன்னிசாமி பக்தர்களுக்கும், ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும், அய்யப்ப சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி முன்னிலையில் குருசாமிகள் சந்தனமாலை மற்றும் துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர். அப்போது, விரதம் முடியும் வரை அய்யப்ப பக்தியுடன் கார்த்திகை விரதத்தை சிரத்தையுடன் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

படிபூஜை

இதில் சுமார் 200 அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கோபூஜையும், அய்யப்ப சாமிக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அய்யப்ப சேவா சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் முத்தையா, பொருளாளர் வள்ளி ராஜேந்திரன் மற்றும் தன்னார்வ அய்யப்ப குருசாமிகள், பக்தர்கள், கன்னிசாமிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இரவில் மூலவர் சன்னதியில், 18-ம் படிபூஜை செய்து சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜை மகா உற்சவ விழா டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் (கார்த்திகை மாத இறுதியில்) விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி எளிமையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மகா உற்சவ நிகழ்ச்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அரியலூர் பகுதியில்...

இதேபோல் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அரியலூரில் உள்ள அய்யப்பன் கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் காரணமாக, நேற்று அரியலூர் பகுதியில் குறைவான பக்தர்களே மாலை அணிந்தனர். அரியலூரில் உள்ள ஒரு சில கோவில்களில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பக்தர்கள் தாங்களாகவே மாலை அணிந்து கொண்டனர். 

Next Story