கார்த்திகை மாத பிறப்பு: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் கடந்த ஆண்டை விட எண்ணிக்கை குறைவு
கார்த்திகை மாத பிறப்பையொட்டி புதுக்கோட்டையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த ஆண்டை விட குறைவான பக்தர்கள் விரதம் தொடங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை,
அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு, தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் அய்யப்ப பக்தர்கள் பலர் இந்த ஆண்டு விரதம் இருந்து கோவிலுக்கு சிரமம் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி புதுக்கோட்டையில் நேற்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். புதுக்கோட்டை பெரியார்நகர் பூங்கா நகர் பக்கம் உள்ள அய்யப்பன் கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. கொடியேற்றப்பட்ட பின் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அய்யப்ப சேவா சங்கத்தினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிலர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
பக்தர்கள் குறைவு
இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலிலும், பல்லவன் குளம் அருகே உள்ள விநாயகர் கோவிலிலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். நகரில் ஆங்காங்கே உள்ள கோவில்களிலும் வழிபாடு நடத்தி விரதத்தை தொடங்கினர். அய்யப்ப பக்தர்கள் கூறுகையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பலர் விரதம் தொடங்கவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்களே மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர் என்றனர். இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால் அய்யப்ப பக்தர்கள் இரு முடி கட்டி இங்கேயே தரிசனம் செய்து வழிபட வேண்டிய ஏற்பாடுகளை செய்ய நேரிடலாம் என பூங்காநகர் அய்யப்பன் கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
அரிமளம்
அரிமளம் ஒன்றியத்திலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதில் இந்த ஆண்டு ஆர்வம் காட்டவில்லை. கே. புதுப்பட்டியில் உள்ள அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்ல வாய்ப்பு கிடைக்காததால் அங்கு உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி மாலையை கழற்றிவிரதத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story