கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 16 Nov 2020 8:11 PM GMT (Updated: 16 Nov 2020 8:11 PM GMT)

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கரூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்.

கரூர்,

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் அதிகாலை முதலே அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அந்தவகையில் நேற்று கரூரில் உள்ள கரூர் பசுபதீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு விசேஷ ஹோமங்கள் நடைபெற்று, நடை திறக்கப்பட்டது.

பின்னர் அய்யப்பனுக்கு பால், நெய், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முதன்முதலில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் கன்னிசாமி பக்தர்களுக்கும், ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும், குருசாமி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு பூஜைகள்

அப்போது, விரதம் முடியும் வரை அய்யப்ப பக்தியுடன் கார்த்திகை விரதத்தை சிரத்தையுடன் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதில் 80-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும் கரூர் பசுபதீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு கரூர் இக்கோவிலில் 1000-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக 100-க்கும் குறைவான பக்தர்களே மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

அன்னதானம்

இதேபோல் அகில பாரதிய அய்யப்பா தர்ம பிரசார சபாவின், கரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு நேற்று கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும், மாநிலத்தலைவர் ராஜூ முன்னிலையிலும், கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், மாவட்டத்தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் வாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டை

கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் அய்யப்பன் கோவிலில் நேற்று காலையில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர். இதில் கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

Next Story