திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட கோவில்களில் சங்காபிஷேகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட கோவில்களில் நேற்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்,
கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில்(சோமவாரம்) சிவன்கோவில்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை முதல் சோம வாரமான நேற்று மாலை 6 மணியளவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிவன் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டு அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் மற்றும் சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
அம்மனுக்கு அபிஷேகம்
அதன்பின்னர், தங்க பிடிபோட்ட சங்கில் உள்ள புனிதநீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மீதமுள்ள சங்குகளில் உள்ள புனிதநீரால் ஜம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இந்த மாதத்தில் வரும் 4 சோமவாரத்திலும் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பூமிநாதசுவாமி கோவில்
இதேபோல, மண்ணச்சநல்லூர் பூமிநாத சாமி கோவிலில் ஹோமமும், அதனைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை முதல் சோம வார விழா நடைபெற்றது. இதையொட்டி, போஜீஸ்வரருக்கும், ஆனந்தவள்ளி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
உத்தமர் கோவில்
திருச்சி நெம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்யாகாவஜனம், சங்கு பூஜைகள் மற்றும கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை மற்றும் கும்ப தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story