மயிலாடுதுறை அருகே காதலி பேசாததால், விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறை அருகே காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டர். மருத்துவமனையில் அவருக்கு சரியான சிக்சை அளிக்கவில்லை எனக்கூறி செவிலியரை தாக்கிய தாய்-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் கீழதெருவை சேர்ந்தவர் விஜயசெல்வன்(வயது 34). இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களாக அந்த பெண் விஜயசெல்வனிடம் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயசெல்வன் சம்பவத்தன்று இரவு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் விஜயசெல்வன் பரிதாபமாக இறந்தார்.
செவிலியர் மீது தாக்குதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசெல்வனின் சகோதரர் வீரபாண்டி, அவரது தாய் சங்கீதா ஆகியோர் சேர்ந்து விஜயசெல்வனுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவர் இறந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் கம்ப்யூட்டரை அடித்து உடைத்துள்ளனர். அப்போது அங்கே பணியிலிருந்த செவிலியர் கீர்த்திகா என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அதை தடுக்க வந்த இரவு பாதுகாவலரையும் அவர்கள் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செவிலியர் கீர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார், வீரபாண்டி மற்றும் சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் நடந்த தாக்குதல் காரணமாக விஜயசெல்வனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. நேற்று விஜயசெல்வனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜயசெல்வன் இறந்தது தொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story