வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 29.61 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்


வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 29.61 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 17 Nov 2020 4:00 AM IST (Updated: 17 Nov 2020 6:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 29 லட்சத்து 61 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 79 ஆயிரத்து 280 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 82 ஆயிரத்து 124 பேரும், இதர வாக்காளர்கள் 164 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 61 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி இன்று முதல் (அதாவது நேற்று) நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்த பணிகளுக்கான படிவங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்காக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கான விண்ணப்பங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க வசதியாக வருகிற 21 மற்றும் 22-ந் தேதியும், அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந் தேதியும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

அடுத்த மாதம் 15-ந் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 20.1.2021 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க.வை சேர்ந்த மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் பேசும்போது, அனைத்து அரசியல் கட்சியினரும் தெரிந்து கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்களை இதுவரை நீக்கம் செய்யவில்லை. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும், என்றார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வை சேர்ந்த சூரமங்கலம் பகுதி செயலாளர் பாலு பேசுகையில், பெரும்பாலான இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே மீதி உள்ளதாக தெரிகிறது. அதையும் பரிசீலனை செய்து நீக்கம் செய்தால் ஏதுவாக இருக்கும், என்றார்.

இதையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் எடுத்துக் கூறினர்.

Next Story