5 சட்டமன்ற தொகுதிகளில் 12,35,534 வாக்காளர்கள் - பெண்களை விட ஆண்களே அதிகம்


5 சட்டமன்ற தொகுதிகளில் 12,35,534 வாக்காளர்கள் - பெண்களை விட ஆண்களே அதிகம்
x
தினத்தந்தி 17 Nov 2020 3:45 AM IST (Updated: 17 Nov 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கார்த்திகா வெளியிட்டார். இந்த பட்டியலில் மொத்தம் 12,35,534 வாக்காளர்களில் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்2021-ஐ வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., சுப்பிரமணியம், தி.மு.க. சார்பில் கீரை விஸ்வநாதன், சூடபட்டி சுப்ரமணி, பொன்.மகேஸ்வரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்காளர் பட்டியலை பெற்றுகொண்டனர்.

அப்போது நடந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வருகிற 1.1.2021-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் 2021 வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 14.2.2020 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,33,053. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் 2021-ன்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,35,534. இதில் 6,27,332 ஆண் வாக்காளர்களும், 6,08,064 பெண் வாக்காளர்களும், 138 3-ம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். 1000 ஆண் வாக்காளர்களுக்கு 969 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதனால் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடந்த தொடர் சுருக்கதிருத்த பணி மூலம் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 4,608, நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,127.இந்த வரைவு வாக்காளர் பட்டியல் தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 856 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வருகிற 21-ந் தேதி முதல் டிசம்பர் 13-ந்தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது பதிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கதிருத்தம் 2021 பணிகள் தற்போது தொடங்கி டிசம்பர் மாதம் 15-ந் தேதிவரை நடைபெற உள்ளது. 1.1.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வருகிற 21, 22-ந் தேதிகள், டிசம்பர் 12, 13-ந்தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

வாக்காளர் பட்டியலில் 2 முறை வாக்காளர் பெயர் இடம் பெற்றிருப்பதை கண்டறிந்து நீக்க வேண்டும். வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள். அந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் தாசில்தார்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story