ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார். அந்த வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சியினரும் பெற்றுக்கொண்டனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 1,122 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 580 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்கள் ஆகிய 11 இடங்களில் மொத்தம் 593 மையங்களில் தொடர் திருத்த முறையில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்திட 31.10.20-ந்தேதி வரை விண்ணப்பம் செய்த அனைவரின் விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வாக்காளர் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16.10.20-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 93 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 13 ஆயிரத்து 636 பெண் வாக்காளர்களும், 40 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 769 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 15.12.20-ந் தேதி வரை படிவங்கள் பெறும் பணியை அனைத்துச் சிறப்பு மையங்களிலும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத், தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) இளவரசி, தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார், ராணிப்பேட்டை அனைத்துத் தாசில்தார்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story