மேலூர் அருகே பதற்றம்- போலீஸ் குவிப்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட தலைவர் வெட்டி கொலை
மேலூர் அருகே நள்ளிரவில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேலூர்,
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் முத்துக்குமரன் (வயது 37). இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
இவர் நேற்று முன் தினம் இரவு ஊருக்கு வெளியே வயல் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான கோழிப்பண்ணை முன்பு நண்பர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலையில் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுர்ஜித்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா ஆகியோரும் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து முத்துக்குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் அடையாளம் தெரிந்த 5 பேர் மீது மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சம்பவத்தன்று முத்துக்குமரனுடன் தூங்கிய அவரது நண்பர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனிடையே கொலை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சிலர் வெள்ளரிப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் வெள்ளரிப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே முத்துக்குமரன் கொலையில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், உடலை வாங்க மறுத்தும் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story