மக்காச்சோளம் பயிர் சேதத்திற்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் மனு


மக்காச்சோளம் பயிர் சேதத்திற்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 17 Nov 2020 3:45 AM IST (Updated: 17 Nov 2020 8:17 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் சேதத்திற்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் புள்ளியல் துறை கொடுத்த மாறுபட்ட விவரங்களால் ஒரே கிராமத்தில் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் மற்றொரு விவசாயிக்கு ரூ.1,800-ம் பயிர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு பாரபட்சமின்றி வழங்கவேண்டும்.

சாத்தூர் அருகே உள்ள சிலுவம்பட்டி கிராமத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மணல் அள்ளுவது தொடர்பாக சாத்தூர் ஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மணல் அள்ளுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story