வருகிற 21, 22-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்


வருகிற 21, 22-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2020 10:00 PM GMT (Updated: 17 Nov 2020 3:06 AM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை,

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொதுமக்களின் பார்வைக்கு நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருந்தால் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலா்களிடம் வழங்கலாம்.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி வருகிற 21 மற்றும் 22-ந்தேதியும் 2 நாட்கள் வாக்காளா்கள் சோ்ப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றன. முகாமில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும் மற்றும் திருத்தம், நீக்கம் குறித்தும் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் அடுத்த மாதம் 2 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இம்முகாம்களின் நோக்கம் தகுதியுடைய வாக்காளர் பெயர் விடுபடக்கூடாது என்பதே ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் முகவரி மாற்றம் திருத்தம், பெயர் நீக்கம் குறித்து கண்டறிந்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் பெறக்கூடிய மனுக்களில் பெயர்நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த மனுக்களுக்கு உடனடியாக களப்பணி மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story