வாலிபரை தாக்கிய விவசாயியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை - வெள்ளோட்டில் பரபரப்பு
வாலிபரை தாக்கிய விவசாயியை கைது செய்யக்கோரி வெள்ளோடு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள கும்மக்காளிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இறந்துவிட்டார். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுடைய மகன் நவீன் (வயது 25). பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக நவீன் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நவீன் தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரை சேர்ந்த ஒருவர் தனது மொபட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை கொண்டு வந்துள்ளார். அந்த ஆட்டுக்குட்டியை பிடித்து கொண்டு தனது மொபட்டில் பின்புறம் உட்காருமாறு நவீனிடம் அவர் கூறி உள்ளார். இதையடுத்து நவீனும் ஆட்டுக்குட்டியைப் பிடித்து கொண்டு அந்த நபரின் மொபட்டில் உட்கார்ந்து சென்றார்.
பின்னர் அதே ஊரை சேர்ந்த நடராஜ் (45) என்பவர் வீட்டுக்கு நவீனை அந்த நபர் அழைத்து சென்று ஆட்டுக்குட்டியை நடராஜிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். நவீனும் அந்த ஆட்டுக்குட்டியை நடராஜிடம் ஒப்படைக்க கொண்டு சென்றுள்ளார்.
அப்போது நவீனை பார்த்து என் வீட்டிலேயே ஆட்டுக்குட்டியை திருடிவிட்டு என்னிடமே ஒப்படைக்கிறாயா? என சாதி பெயரை சொல்லி நடராஜ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நவீனை தாக்கியதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இதை தடுக்க வந்த நவீனின் தாய் தங்கமணியையும், நடராஜ் தாக்கி உள்ளார். இதில் நவீன் காயம் அடைந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த நவீனை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நடராஜ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், நவீனை தாக்கிய நடராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நவீனின் உறவினர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் வெள்ளோடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விரைந்து சென்று நவீனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கூறினார். இதில் நவீனின் உறவினர்கள் சமாதானம் அடைந்து முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story