தொழில் போட்டியில் பயங்கரம்: இறைச்சி வியாபாரி அடித்து கொலை - வாலிபர் கைது


தொழில் போட்டியில் பயங்கரம்: இறைச்சி வியாபாரி அடித்து கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2020 11:00 AM IST (Updated: 17 Nov 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் தொழில் போட்டி காரணமாக இறைச்சி வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தாசில்தார் நகரில் உள்ள சுப்ரமணியசிவா தெருவை சேர்ந்தவர் சையது முகமது (வயது 40) . இறைச்சி வியாபாரி. இவர், தீபாவளி பண்டிகையன்று தாமரைக் குளம் கல்லூரி விலக்கு பகுதியில் தற்காலிகமாக இறைச்சி கடை நடத்தினார்.

அதே பகுதியில் தென்கரை வாகம்புலி பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் (34), அக்கீம் (44) ஆகியோர் நிரந்தரமாக இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு இறைச்சி வியாபாரம் செய்வது தொடர்பான தொழில் போட்டியில், சையது முகமதுவுக்கும், ஜாபர் சாதிக், அக்கீம் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவில், சையது முகமதுவுடன் மற்ற 2 பேரும் தகராறு செய்தனர். அப்போது ஆத்திரத்தில் அவரை ஜாபர் சாதிக், அக்கீம் ஆகியோர் கைகளால் தாக்கி கீழே தள்ளி விட்டனர். மேலும் அவர்கள் மார்பு பகுதியில் ஏறி மிதித்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சையது முகமது மயங்கினார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சையது முகமதுவை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே சையது முகமதுவின் உறவினர்கள், தாமரைக்குளம் சாலையில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். அப்போது, கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சையது முகமதுவின் அண்ணன் ஜாகீர் உசேன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஜாபர் சாதிக், அக்கீம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அக்கீமை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story