வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில், 20 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில், 20 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
x
தினத்தந்தி 17 Nov 2020 11:30 AM IST (Updated: 17 Nov 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் 20 லட்சம் வாக்காளர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

கடலூர்,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று காலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் 20 லட்சத்து 82 ஆயிரத்து 840 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 10 லட்சத்து 28 ஆயிரத்து 380 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 54 ஆயிரத்து 308 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 152 பேரும் உள்ளனர். இதில் ஆண்களை விட 25 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 1.1.2021 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பணிக்கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்படும். இம்மாதம் வருகிற 21, 22-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் முடிவு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் நாளொன்றுக்கு 10 மனுக்களுக்கு மிகாமலும் வருகிற 15.12.2020 வரை காலங்களில் மொத்தம் 30 மனுக்களுக்கு மிகாமலும் கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 2021 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் 15.12.2020 வரையிலான காலங்களில், அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளார் பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரால் பெறப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரங்களில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், நகரசபை முன்னாள் தலைவர் குமரன், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் லெனின், நகர துணை செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story