ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை


ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
x
தினத்தந்தி 17 Nov 2020 11:30 AM IST (Updated: 17 Nov 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் தளர்த்தப்பட்டு இ-பதிவு முறை நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த பூங்காக்கள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கிறது.

அதன்படி தீபாவளியான கடந்த 14-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 3 ஆயிரத்து 163 பேரும், நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 16 பேர் வருகை தந்து உள்ளனர். அதுபோன்று நேற்று முன்தினம் ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் 2,058 பேர் வந்தனர். கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்ல சாலையில் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காக்களில் இயற்கை அழகு மற்றும் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து இருந்தனர்.

கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து அறைகள் எடுத்து தங்கினர். ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்ததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் சாலையோர வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் அவர்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தாவரவியல் பூங்காவுக்கு வருகிறவர்களை கொண்டு கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story