ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்கள்: கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மதில் சுவர் அமைக்கும் பணி தீவிரம்


ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்கள்: கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மதில் சுவர் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Nov 2020 6:28 AM IST (Updated: 18 Nov 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரி பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர். இதை தடுக்க கிருஷ்ணா கால்வாயில் மதில் சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம். ஏரி முழுவதுமாக நிரம்பினால் கடல் போல் காட்சியளிக்கும்.

ஏரியை ரசித்து மகிழவும், ஏரியின் அருகில் உள்ள தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் அருங்காட்சியகத்தை கண்டுகளிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூண்டிக்கு வருவது வழக்கம். இப்படி வரும் சுற்றுலா பயணிகள் கிருஷ்ணா நதி கால்வாய் பூண்டி ஏரியில் சங்கமிக்கும் பகுதியில் இறங்கி குளித்து மகிழ்வது உண்டு. இப்படி குளிக்கும்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் இறந்துள்ளனர்.

கால்வாயில் குளிக்க கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் பலர் இறங்கி குளித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதை தடுக்க கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியில் சங்கமிக்கும் பகுதியில் மதில் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு இதனை ஏற்று மதில் சுவர் அமைக்க நிதி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 150 மீட்டர் தூரத்துக்கு மதில் சுவர் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை அதிகாரி பிரதீஷ் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story