மாவட்டம் முழுவதும் வெளுத்துகட்டிய மழை கொடைக்கானலில் நட்சத்திர ஏரி நிரம்பியது


மாவட்டம் முழுவதும் வெளுத்துகட்டிய மழை கொடைக்கானலில் நட்சத்திர ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 18 Nov 2020 7:46 AM IST (Updated: 18 Nov 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் நேற்று மழை வெளுத்து கட்டியது. கொடைக்கானலில் நட்சத்திர ஏரி நிரம்பி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினமும் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. இதில் நிலக்கோட்டையில் 21.4 மி.மீ., கொடைக்கானலில் அப்சர்வேட்டரியில் 17 மி.மீ., போட்கிளப்பில் 15.3 மி.மீ., பழனியில் 11 மி.மீ., சத்திரப்பட்டியில் 13.2 மி.மீ., திண்டுக்கல்லில் 12.9 மி.மீ. உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 104.6 மி.மீ. மழை பதிவானது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணிக்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதற்கிடையே மாலை 3 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த முறை சுமார் 30 நிமிடங்கள் நல்ல மழை பெய்தது.

பழனி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. மேலும் சேதம் அடைந்த சாலைகளின் பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. அதேநேரம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி இருக்கின்றன. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டும் பணி நடக்கிறது. இதனால் மார்க்கெட் அருகேயுள்ள நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியது. இதனால் மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது.

ஒரு சில வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். ஆனால், சாலையோரம் இடம் கிடைக்காதவர்கள், சகதிக்கு நடுவே வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகளும், காய்கறி வாங்க சென்ற மக்களும் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதேபோல் கொடைக்கானலில் 4-வது நாளாக நேற்று காலை 8.30 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 10 மணி வரை விட்டு, விட்டு பெய்தது. மழையின் காரணமாக பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து நட்சத்திர ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு சாலையோர வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து நேற்று இரவு 7 மணியளவில் நகராட்சி ஆணையர் நாராயணன் உத்தரவின்பேரில் உதவி என்ஜினீயர் பட்டுராஜன் தலைமையில் ஊழியர்கள் ஏரியின் மதகுகளை திறந்து விட்டனர். இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. நட்சத்திர ஏரி நிரம்பியதால் வெள்ளிநீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டியது. இதையடுத்து நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்லும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும் நகரை ஒட்டியுள்ள பாம்பார் அருவி, பியர்சோலா அருவி போன்ற அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. இந்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழைக்கு கொடைக்கானலை அடுத்த பெருமாள் மலை அருகே மலைப்பாதையில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது.


Next Story