திருமணம் நடந்தால் பிரிந்து விடுவோம் என்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தோழிகள் - கொல்லம் அருகே பரிதாபம்


திருமணம் நடந்தால் பிரிந்து விடுவோம் என்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தோழிகள் - கொல்லம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 18 Nov 2020 7:00 AM GMT (Updated: 18 Nov 2020 3:42 AM GMT)

திருமணம் நடந்தால் பிரிந்து விடுவோம் என்று ஆற்றில் குதித்து தோழிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவருடைய மகள் அமிர்தா (வயது 21). அதுபோன்று சடையமங்கலம் அருகே உள்ள ஆயுர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் ஆர்யா (21). இவர்கள் 2 பேரும் கொல்லத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர்.

இவர்கள் இணைபிரியா தோழிகளாக பழகினர். கல்லூரி விடுமுறை விட்டாலும், 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். அதுபோன்று எங்கு சென்றாலும் 2 பேரும் சேர்ந்துதான் சென்று வந்தனர்.

இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார்.

தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் உறுதியுடன் கூறி உள்ளார்.

இதை அவரின் பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர்கள் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள கூறினார்கள். அதை அவர் தனது தோழியிடம் கூறினார். எனவே அவர்கள் இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.

வாழும்போதுதான் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே சாகும்போதாவது ஒன்றாக சாவோம் என்றுக்கூறி அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14-ந் தேதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு செம்பு முறிஞ்சபுழா பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சடையமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரின் உடல்களை தேடினர்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூச்சாக்கள் காயலில் கிடந்த அமர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆர்யாவின் உடல் மீட்கப்பட்டது.

பின்னர் போலீசார் அந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து சடையமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story