மழைவெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை - அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


மழைவெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை - அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 18 Nov 2020 10:25 AM IST (Updated: 18 Nov 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

மழைவெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வட்டார அளவிலான 14 மண்டல அலுவலர்கள் மற்றும் நகராட்சி அளவிலான 5 மண்டல அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் மண்டல அலுவலர்கள், புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடம், பேரிடர் காலத்தில் மக்களை தங்க வைக்க வேண்டிய இடங்களை தணிக்கை செய்யவும், முதல் தகவல் அளிப்பவர்களுடன் கலந்தாய்வு செய்தும், களத் தகவல்களை சேகரிக்க வேண்டும்.

மேலும் மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளதை இக்குழு கண்காணிக்கும். மாவட்ட நிர்வாகத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தேவையான உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். மழையால் பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மண்டல அலுவலரும் பேரிடர் காலத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பேரிடர் காலத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டு வருவதற்கு தேவையான படகுகளை, மீன்வளத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை, பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்வதற்கு தேவையான வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தயாராக வைத்திருக்கவேண்டும்.

பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலர்களும் முதல் நிலை பொறுப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் சிதம்பரம் மதுபாலன், விருத்தாசலம் பிரவின்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story