முட்டல் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சினை: உதவி கலெக்டர் அலுவலகத்தை 2 கிராம விவசாயிகள் முற்றுகை
முட்டல் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், 2 கிராம விவசாயிகள், ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ளது முட்டல் ஏரி. இந்த ஏரியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு கல்லாநத்தம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாய்க்கால் வெட்டி ஏரியில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீரை விவசாய பாசனத்துக்காக கல்லாநத்தம் ஏரிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் முட்டல் ஏரி நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது. எனவே நிரம்பி வழியும் தண்ணீரை கல்லாநத்தம் ஏரிக்கு திறப்பதற்கு அந்த பகுதி விவசாயிகள் ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் இதற்கு அம்மம்பாளையம் கிராம விவசாயிகள், கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீரை கொண்டு சென்றால் அம்மம்பாளையம் பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கல்லாநத்தம், அம்மம்பாளையம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் உதவி கலெக்டர் மு.துரை, தாசில்தார் அன்புசெழியன், போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story