தாளவாடி அருகே வினோத திருவிழா: பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணியை வீசி நேர்த்திக்கடன் - கொரோனா தொற்றால் கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


தாளவாடி அருகே வினோத திருவிழா: பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணியை வீசி நேர்த்திக்கடன் - கொரோனா தொற்றால் கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 11:30 AM IST (Updated: 18 Nov 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ள கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்துள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான சாணியடி திருவிழா நேற்று காலையில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சாமியை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆண் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பாரம்பரியமிக்க இந்த வினோத நிகழ்ச்சியை பெண் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்கள் வீசிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் இட்டனர். இதனால் விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக வளரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார். எங்கள் ஊரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பை மேட்டின் மீது ஏறிச்சென்றபோது ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக்கண்டதும் பொதுமக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து 3-வது நாள் சாணத்தில் இருந்து மீண்டு எழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறிவிட்டு மறைந்துவிட்டார். அன்றில் இருந்து மூதாதையர் வழிகாட்டுதல் படி இந்த விழாவை எங்கள் கிராம மக்கள் நடத்தி வருகிறார்கள்,’ என்றனர்.

இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் தமிழக பக்தர்களுடன் இணைந்து கர்நாடக பக்தர்களும் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தமிழக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story