தக்கலை அருகே பரிதாபம்: வாகனம் மோதி மருந்துகடை உரிமையாளர் பலி


தக்கலை அருகே பரிதாபம்: வாகனம் மோதி மருந்துகடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2020 6:00 AM GMT (Updated: 18 Nov 2020 6:00 AM GMT)

தக்கலை அருகே வாகனம் மோதி மருந்துகடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.

பத்மநாபபுரம், 

தக்கலை அருகே மேக்காமண்டபம் வலியவீட்டுவிளையை சேர்ந்தவர் டென்னிஸ். இவருடைய மகன் சைஜூ (வயது 26). இவர் வேர்கிளம்பி அடுத்த முண்டவிளையில் மருந்துகடை வைத்து நடத்தி வந்தார்.

சைஜூவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி பெண் பார்த்து இரு வீட்டாரும் பேசி அடுத்த மாதம் (டிசம்பர்) திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். சைஜூ தனது கடையில் பணியாளர் ஒருவரும் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த சைஜூ, 9.30 மணிக்கு கடையை பூட்டுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வேர்கிளம்பி நோக்கி சென்று கொண்டிருந்தார். வேர்கிளம்பி அம்பலத்துவிளை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சைஜூ, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைகண்ட அப்பகுதி மக்கள் கொற்றிகோடு போலீசாருக்கும், சைஜூவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சைஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சைஜூவின் தந்தை டென்னிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடிவருகிறார்கள்.

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மருந்துகடை உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story