ராமநாதபுரத்தில் பலத்த மழை: வீடு இடிந்து பெண் சாவு


ராமநாதபுரத்தில் பலத்த மழை: வீடு இடிந்து பெண் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2020 11:30 AM GMT (Updated: 18 Nov 2020 11:40 AM GMT)

ராமநாதபுரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியில் கிழவன் என்பவரின் மனைவி சோலையம்மாள் (வயது 70). இவருடைய கணவர் மற்றும் மகன்கள் இருவரும் இறந்துவிட்டதால், தனது மருமகள்கள் குணசுந்தரி, சசிகலா ஆகியோருடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மருமகள்களுடன் சோலையம்மாள் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 6 மணி அளவில் மருமகள்கள் குணசுந்தரி, சசிகலா ஆகியோர் எழுந்து வீட்டிற்கு வெளியில் வந்து தங்களது குழந்தைகளுக்கு முகம் கழுவிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சோலையம்மாளின் மேல் கட்டிட இடிபாடுகள் விழுந்து அமுக்கின. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள்கள் கதறி கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர். ஆனால் சோலையம்மாளை மீட்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது.

சோலையம்மாளை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சோலையம்மாளின் மகள் அமுதா, ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீடு இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்த வீட்டின் மீதம் உள்ள பகுதிகளையும் ஆபத்து கருதி இடித்து தள்ளினர். ராமநாதபுரத்தில் பலத்த மழை காரணமாக வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருவாடானை தாலுகாவில் கொட்டாங்குடி கிராமத்தில் வீட்டு சுவர் இடிந்து பூங்காவனம்(70) என்ற பெண் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Next Story