பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் அருகே கடலில் மூழ்கிக்கிடக்கும் மற்றொரு மிதவையை மீட்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் அருகே கடலில் மூழ்கிக்கிடக்கும் மற்றொரு மிதவையை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராமேசுவரம்,
பாம்பனில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில்வே பாலத்தின் அருகில் வடக்கு பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த புதிய ரெயில் பணிக்காக கடலுக்குள் 5-க்கும் மேற்பட்ட இரும்பினாலான மிதவைகள் நிறுத்தப்பட்டு அதில் கடலில் தூண்கள் அமைக்க பயன்படும் எந்திரம், கிரேன் மற்றும் உள்ளிட்ட உபகரணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதுபோல் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த மாதம் 30-ந்தேதி அன்று அதிகாலையில் புதிய ரெயில் பணிக்காக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேனுடன் கூடிய இரும்பினாலான மிதவை ஒன்று தூக்குப்பாலம் அருகே உள்ள தூணின் மீது மோதியபடி நின்றது. பாலத்தின் மீது மோதிய மிதவை மீன்பிடி படகுகள் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து சற்று தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டன. தூக்குப்பாலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மிதவை ஆனது புதிய ரெயில் பணிக்காக கடலில் அமைக்கப்பட்டிருந்த தூண்கள் உள்ள பகுதியில் கடலில் மூழ்கிய நிலையில் உள்ளன.
இந்த நிலையில் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தூக்குப்பாலம் அருகே உள்ள கடல் பகுதியில் மூழ்கிக்கிடக்கும் மிதவை நேற்று வரையிலும் மீட்கப்படவில்லை. பாம்பனில் இன்னும் நாட்கள் செல்ல செல்ல கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகமாகும் என்பதால் தூக்குப்பாலம் அருகே மூழ்கிக்கிடக்கும் மிதவையால் ரெயில் பாலத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே தூக்குப்பாலத்தின் மிக அருகில் கடலில் மூழ்கிக்கிடக்கும் கிரேனுடன் கூடிய மிதவையை மீட்க புதிய ரெயில் பால கட்டுமானப் பொறியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் தீவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல் கடந்த 9-ந் தேதி அன்று பாம்பன் ரெயில் பாலத்தின் மீது மோதி நின்ற மற்றொரு இரும்பினாலான மிதவையான நேற்று முன்தினம் மீன்பிடி படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story