வடகிழக்கு பருவமழை தீவிரம்: தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள் - மண்பாண்ட தொழில் பாதிப்பு


வடகிழக்கு பருவமழை தீவிரம்: தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள் - மண்பாண்ட தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 5:30 PM IST (Updated: 18 Nov 2020 5:29 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் மானாமதுரை பகுதியில் தொடர் மழையினால் மண்பாண்ட தொழில்கள் பாதிப்படைந்துள்ளது.

சிவகங்கை,

தமிழகம் முழுவதும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள ஊருணி, குளங்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சிவகங்கை நகரில் நேற்று பெய்த தொடர் மழையால் சிவகங்கை காந்தி வீதி, சிவன் கோவில் வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது.

காரைக்குடி பகுதியில் நேற்று காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியிலும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதுதவிர கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வறண்டு கிடந்த நெல் பயிர்களுக்கு தொடர் மழையினால் தற்போது பசுமையாக காட்சியளித்து வருகிறது. காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் தொடர் மழையினால் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதேபோல் மானாமதுரை பகுதியில் நேற்று காலை 5 மணி முதல் பகல் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இதனால் மானாமதுரையில் புகழ் பெற்றதாக உள்ள மண்பாண்ட தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பிறந்தாலே மானாமதுரையில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதையடுத்து தற்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிக்காக மண்பாண்ட தொழிலாளர்கள் தயாராக இருந்து வந்தனர். இந்தநிலையில் மண் எடுக்கும் இடம் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழில் கூடங்களை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால் மண்பாண்ட தொழில்கள் செய்ய முடியாமல் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுபோல் திருப்புவனம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சிங்கம்புணரி, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் இந்த பகுதியில் குளுமையான சூழ்நிலை நிலவியது.

Next Story