சுற்றுச்சூழல், வன விலங்குகளை பாதுகாக்க பெருமாள் மலையில் கல் குவாரி அமைக்க கூடாது - கிராம மக்கள் மனு


சுற்றுச்சூழல், வன விலங்குகளை பாதுகாக்க பெருமாள் மலையில் கல் குவாரி அமைக்க கூடாது - கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 18 Nov 2020 5:45 PM IST (Updated: 18 Nov 2020 5:39 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பெருமாள் மலையில் கல்குவாரி அமைக்க கூடாது என்று கிராம மக்கள் மனு அளித்து உள்ளனர்.

மதுரை,

வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ராஜாக்காள் ஊராட்சியை சேர்ந்த மறவபட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் பெருமாள் மலை உள்ளது. இந்த மலை 80 எக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது. சுமார் 900 அடி உயரம் கொண்டது. அதனை ஒட்டிய 20 எக்டேர் இடம் பள்ளிக்கரடு என்று அழைக்கப்படுகிறது. இந்த பள்ளிக்கரடு பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பெருமாள் மலையில் குவாரிகள் அமைப்பதற்கு முயற்சி நடந்தது.

அப்போது கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் மற்றும் வன அலுவலரிடம் மனு அளித்தோம். இதனைத்தொடர்ந்து வன அலுவலர்கள் பெருமாள் மலையை ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை கொடுத்தனர். அந்த அறிக்கையில் பெருமாள் மலையில் 1978-ம் ஆண்டு சுமார் 40 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் நடப்பட்டதில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து உள்ளது என்றும், இங்கு குவாரி அமைக்க அனுமதி தந்தால் மரங்கள் அனைத்தும் அழிந்து போகும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையில் அடிப்படையில் பெருமாள் மலையில் குவாரிக்கு அனுமதி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பெருமாள் மலையில் குவாரி தொடங்க கனிம வளத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. குவாரி தொடங்கினால் பெருமாள் மலை முற்றிலும் அழிந்து போகும். மேலும் இந்த மலையை சுற்றி பால் பண்ணைகள் மற்றும் வீடுகள் உள்ளன. மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலும் உள்ளது. இது தவிர எங்கள் பகுதியின் வாழ்வாதாரமான 2 கண்மாய்கள் உள்ளன.

பெருமாள் மலையில் குவாரி பணி செய்ய அனுமதித்தால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு எங்கள் ஊரின் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும். மேலும் அங்கு வீடுகள், மாடுகள், பறவைகள் என அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே பெருமாள் மலையில் கல்குவாரி கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த பகுதியின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வனவிலங்குகளை காக்க கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story