வண்ணம்புத்தூரில், இழப்பீடு கேட்டு மக்காச்சோள வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
வண்ணம்புத்தூரில் இழப்பீடு கேட்டு மக்காச்சோளம் பயிரிட்டுள்ள வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்ணம்புத்தூர் கிராமத்தில் மழை பெய்யாமலும் பயிர் குறுகியும் வளர்ச்சி பெறாமல் கதிர் வரவேண்டிய நிலையில் கதிர் வராமலும் படைப்புழு தாக்குதலாலும் மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயிர் காப்பீடு செய்ய கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் வெறும் 3 நாட்கள் அவகாசத்தை அரசு கொடுத்தது. பின்னர் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து இந்த மாதம் 2 நாட்கள் கால அவகாசத்தை நீட்டித்தது.
இருப்பினும் விவசாயிகளுக்கு போதுமான கால அவகாசத்தை கொடுக்காததை கண்டித்தும், அனைத்து மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்தவர்களுக்கும் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும், மேலும் மக்காச்சோளப் பயிர் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து, மக்காச்சோளப் பயிர் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு வண்ணம்புத்தூர் மக்காச்சோளப் பயிர் சாகுபடியாளர்கள் சார்பில் விவசாயி தனவேல் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை இணை இயக்குனர் லதா போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடக் கோரியும், அவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தரும்படியும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனைத்து விவசாயிகள் சார்பில் கொடுத்தனர்.
Related Tags :
Next Story