திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி 70 சதவீதம் நிறைவு - கலெக்டர் எஸ்.சிவராசு பேட்டி


திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி 70 சதவீதம் நிறைவு - கலெக்டர் எஸ்.சிவராசு பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2020 8:00 PM IST (Updated: 18 Nov 2020 7:41 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி அருகே உள்ள முக்கொம்பு மேலணையானது காவிரி ஆற்றை இரண்டாக பிரித்து பாசனத்துக்கான தண்ணீரை காவிரி ஆற்றிலும், வெள்ள உபரி நீரை கொள்ளிடத்திலும் வெளியேற்றும் வகையில் கட்டப்பட்டது. 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணையானது கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வெள்ள பெருக்கில் கொள்ளிடம் கதவணையின் 9 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன.

அணையை பாதுகாக்கவும், வெள்ள நீரை பாதுகாப்பாக வெளியேற்றவும், தாற்காலிக பாதுகாப்பு அணை ரூ.38.85 கோடி செலவில் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. பின்னர், கொள்ளிடம் ஆற்றின் இடிந்த மதகுக்கு கீழ்புறம் புதிதாக கதவணை கட்டுவதற்காக ரூ.387 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு (2019) பிப்ரவரியில் புதிய கதவணை பணிகள் தொடங்கப்பட்டன. பைல் பவுண்டேஷன் என்ற தொழில்நுட்பத்தில் 484 குழாய்கள் பதித்து ஸ்திரத்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஏற்கெனவே 3 முறை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட கலெக்டரும் அவ்வப்போது பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி இரவு, பகல் பாராது துரிதமாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டது. பவுண்டேஷன் பணிகள் முடிந்து 45 தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இரும்பு ஷட்டர்கள் தயாரித்து தயார் நிலையில் உள்ளது.

கட்டுமானப் பணிகளை 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கேற்ப பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய கதவணையானது நவீன தொழில்நுட்பத்தையும் எவ்வளவு வெள்ளத்தையும் தாங்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுமானப் பணியிடத்தில் முகாமிட்டு பணிகளின் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சிறப்பு திட்டங்களின் கோட்டப் பொறியாளர் கீதா, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story