நாகை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - கணக்கில் வராத ரூ.44 ஆயிரம் பறிமுதல்


நாகை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - கணக்கில் வராத ரூ.44 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Nov 2020 8:00 PM IST (Updated: 18 Nov 2020 7:52 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகம் நீலா தெற்கு வீதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, இலவச தையல் எந்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்க தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் இருந்து சமூகநலத்துறை பணியாளர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடியாக நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமையாளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.44 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து நாகை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவது அரசு அலுவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story