தஞ்சையில், பரபரப்பு சம்பவம்: ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; 2 பேர் காயம் - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் இருவருக்கு வலைவீச்சு
தஞ்சையில், ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை கரந்தை செங்கல்கார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 47). இவர், கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் எதிரே ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு தஞ்சையை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் வெங்கடேஸ்வரன்(25) என்பவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். வெங்கடேசன், தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார்.
ஓட்டல் உரிமையாளர் முத்துக்குமார் தோசை ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டை ஓட்டல் மீது வீசினார். பின்னர் மின்னல் வேகத்தில் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
மர்ம நபர் வீசிய நாட்டு வெடிகுண்டு உணவகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியில் விழுந்து ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த வெங்கடேஸ்வரன் கன்னத்தில் கண்ணாடி குத்தியதில் காயம் ஏற்பட்டது. மேலும் ஒட்டல் உரிமையாளர் முத்துக்குமாருக்கு கண்புருவத்தில் கண்ணாடி குத்தியதில் லேசான காயம் ஏற்பட்டது. இதில் வெங்கடேஸ்வரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசியதும், அது வெடித்து சிதறியதும் தஞ்சை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களும் வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் வெடிமருந்தும், பால்ரஸ் குண்டுகளும் அங்கு சிதறி கிடந்தன.
சோதனைக்கு பின்னர் தெரிவித்த வெடிகுண்டு நிபுணர்கள், இது சாதாரண வகை நாட்டு வெடிகுண்டுதான் என்றும், கிராமங்களில் நரி பிடிப்பதற்கு இந்த வகையான வெடிகுண்டைத்தான் பயன்படுத்துவர் எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் இருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சையில், ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story