நாகை அருகே பரிதாபம்: இரு முறை கர்ப்பம் கலைந்ததால் புதுமண தம்பதி தூக்கில் தொங்கினர் - கணவர் சாவு; மனைவிக்கு தீவிர சிகிச்சை


நாகை அருகே பரிதாபம்: இரு முறை கர்ப்பம் கலைந்ததால் புதுமண தம்பதி தூக்கில் தொங்கினர் - கணவர் சாவு; மனைவிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 Nov 2020 8:15 PM IST (Updated: 18 Nov 2020 8:19 PM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே இரு முறை கர்ப்பம் கலைந்ததால் மனவேதனை அடைந்த புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 28). இவருக்கும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டையை சேர்ந்த முருகேசன் மகள் தங்கமாரியம்மாள்(27) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் தரித்தார். ஆனால் இருமுறையும் கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் மாரியப்பனும், தங்கமாரியம்மாளும் மிகுந்த மனவேதனை அடைந்தனர். தங்களுக்கு ஒரு வாரிசு கிடைக்காதா? என்று மிகுந்த வேதனையில் ஆழ்ந்த இருவரும் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் மின்விசிறியில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

தூக்கில் மாரியப்பனும், தங்கமாரியம்மாளும் தொங்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தங்கமாரியம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு முறை கர்ப்பம் கலைந்ததால் புதுமண தம்பதி தூக்கில் தொங்கியதும், இதில் கணவர் பலியானதும் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story