மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்


மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2020 8:45 PM IST (Updated: 18 Nov 2020 8:33 PM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் மோகன், துணை செயலாளர் சிவபிரசாத், பொருளாளர் சசிகுமார், துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது மழை பெய்து கொண்டே இருந்தது. மழையில் நனைந்தபடியே மாற்றுத்திறனாளிகள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவதை போல தமிழகத்திலும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடுமையான ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை 3 மாத காலத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்ப வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இன்னும் நிரப்பப்படவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story