கோவில்பட்டியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
கோவில்பட்டியில் மழையால் சேதம் அடைந்த பகுதிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி மார்க்கெட் ரோடு, இலுப்பையூரணி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், சுகாதார துறை துணை இயக்குனர் அனிதா, நகரசபை என்ஜினீயர் கோவிந்தராஜ், யூனியன் ஆணையாளர் சசிகுமார், என்ஜினீயர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கோவில்பட்டி பகுதியில் மழை பாதிப்புகளை தடுக்க என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்துள்ளேன். கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கிய பகுதியை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மழை காலங்களில் தொற்று நோய்கள் வர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் குடிதண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிரந்தர தீர்வு காணப்படும்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 42 பம்ப் மூலமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றி பக்கிங் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பம்ப் மூலமாக எடுக்க முடியாத இடங்களில் 6 லாரிகளை கொண்டு மழைநீரை அகற்றி வருகிறோம். மேலும் 120 பம்புகள் தயார் நிலையில் உள்ளது. எங்கு மழைநீர் தேங்கினாலும் அகற்றப்படும்.
கோவில்பட்டி தினசரி சந்தைக்குள் மழைநீர் செல்லாத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும். கோவில்பட்டி நகரில் பழமையான, இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story