விளாத்திகுளம் கத்தாளம்பட்டியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை


விளாத்திகுளம் கத்தாளம்பட்டியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை
x
தினத்தந்தி 18 Nov 2020 6:34 PM GMT (Updated: 18 Nov 2020 6:34 PM GMT)

விளாத்திகுளம் கத்தாளம்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் தெருவில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் பேரூராட்சி 6-வது வார்டான கத்தாளம்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தெருவில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதிக ளும் செய்து தரப்படவில்லை. கடந்த 10 ஆண்டு காலமாக எவ்வித வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். போதுமான சாலை வசதி இல்லாத காரணத்தினால் மழை காலங் களில் மழைநீர் தேங்கி தொற்று நோய் ஏற்படுவது மட்டுமின்றி, சிறுகுழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. சமீபத்தில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலையும் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.

முற்றுகையிடுவோம்

எனவே கத்தாளம்பட்டி பகுதிக்கு போதிய அடிப்படை வசதி செய்து தர வேண்டும், முதற்கட்டமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தரமுள்ள சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். 

Next Story