அயோத்தி கோவில் கட்டுமானத்தில் புதுமை ராமநவமி தினத்தில் ராமர் சிலை மீது சூரிய ஒளி படும் - பிரதமர் மோடி பரிந்துரை பேரில் நடவடிக்கை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமநவமி தினத்தில் ராமர் சிலை மீது சூரிய ஒளி படும்வகையில் கோவில் கட்டுமானத்தில் புதுமை செய்யும்படி பிரதமர் மோடி பரிந்துரைத்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மங்களூரு,
கர்நாடகத்தில் பெஜாவர் மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள் உள்ளார். இவர் அயோத்தில் ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் அறக்கட்டளையின் 15 உறுப்பினர்களில் ஒருவராகவும் இருக்கிறார். சமீபத்தில் அயோத்திக்கு சென்று ராமர் கோவில் கட்டுமான பணிகளை மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.
ராமர் கோவில் கட்டுமான பணிகள் குறித்து மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள் மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமநவமி தினத்தில் ராமர் சிலை மீது சூரிய ஒளி படும் வகையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரை செய்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதற்கான பணி அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ராமபிரானை பக்தர்கள் தரிசிக்கும்போது நேரில் பார்ப்பதுபோல் முப்பரிமாண தோற்றத்தை(3டி எபெக்ட்) ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். இதற்கான பணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்டுமானத்துக்கு முன்பு மண்பரிசோதனை செய்வது அவசியம். அதற்காக 200 அடி குழி தோண்டி மண்பரிசோதனை நடைபெற்று உள்ளது. தற்போது அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணி நடைபெற்று உள்ளது.
பழைய கட்டிடங்கள் இடித்து இடிபாடுகள் அகற்றப்பட்டு உள்ளன. கோவில் கட்டுமானத்துக்கு தேவையான தூண்கள் எல்லாம் கட்டுமான தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளன. கோவில் கட்டுமான பணிகளை எல் அண்டு டி மற்றும் டாடா நிறுவனங்கள் கூட்டாக மேற்கொண்டு வருகின்றன.
கோவில் கட்டுமான பணியில் வேதவிற்பன்னர்கள் உரிய அறிவுரைகளை வழங்குவார்கள். இதற்காக கர்நாடகத்தை சேர்ந்த ஸ்தபதிகள் கிருஷ்ணராஜ் தந்திரி, குந்திபைல் சுப்ரமணியா பட் ஆகியோர் பெயர்களை பரிந்துரைத்து உள்ளோம்.
கோவில் கட்டுமானத்துக்கான நிதி திரட்டும் பணி ஜனவரி 15-ந் தேதி முதல் தொடங்கும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தன்னார்வ தொண்டர்கள் வீடுகள் தோறும் சென்று நிதி திரட்டுவார்கள். ராமர் கோவில் கட்டி முடிக்க கட்டுமான பணிகள் தொடங்கியதில் இருந்து 3½ ஆண்டுகள் ஆகும். ராமர் கோவில் என்பது வெறும் கட்டுமான பணி மட்டுமல்ல நமது மண்ணின் பாராம்பரிய கலாசாரத்தை மீட்டெடுக்கும் அற்புத பணியாகும்”
இவ்வாறு பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள் கூறினார்.
Related Tags :
Next Story