அபார ஞாபக சக்தியால் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்


அபார ஞாபக சக்தியால் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்
x
தினத்தந்தி 19 Nov 2020 11:22 AM IST (Updated: 19 Nov 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

அபார ஞாபக சக்தியின் மூலம் தனித்திறனை வெளிப்படுத்திய ஆண்டிப்பட்டியை சேர்ந்த 2½ வயது சிறுவன், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தான்.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜீவன்மாணிக்கம். அவருடைய மனைவி திவ்யா. இந்த தம்பதியின் ஒரே மகன் ரினேஷ் ஆதித்யா (வயது 2½). ஜீவன்மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். திவ்யா மற்றும் ரினேஷ் ஆதித்யா ஆகியோர் ஆண்டிப்பட்டியில் வசித்து வருகின்றனர்.

சிறுவன் ரினேஷ் ஆதித்யா, அபார ஞாபக சக்தி உடையவன் என்பதை அவருடைய பெற்றோர் அறிந்தனர். இதனையடுத்து தேசிய கொடிகளின் மூலம் நாடுகளின் பெயர்களை கூறுதல், இந்திய நாட்டின் தற்போதைய மத்திய மந்திரிகளின் பெயர்கள், உலக நாடுகளின் பிரசித்தி பெற்ற விமானங்களின் பெயர்கள், பல்வேறு நாடுகளின் அதிபர் கள், பிரதமர்களின் பெயர்கள், ‘லோகோ’ மூலம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை கூறுதல் தொடர்பாக அவனுக்கு பெற்றோர் பயிற்சி அளித்தனர்.

பெற்றோர் அளித்த பயிற்சியை அப்படியே உள்வாங்கி கொண்ட சிறுவன் ரினேஷ் ஆதித்யா, தான் கற்றதை அபாரமாக வெளிப்படுத்தி அசத்தி வருகிறான். தேசிய கொடியை காட்டினால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் காட்டி வியக்க வைக்கிறான். மேலும் பல நிறுவனங்களின் லோகோவை சரியாக கூறி வருகிறான்.

2½ வயது சிறுவனின் அசாத்திய தனித்திறமை காரணமாக, இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் அவன் இடம் பெற்றுள்ளான். மேலும் கலாம் விஷன் இந்தியா-2020 சான்றிதழ்களை பெற்றுள்ளான். சாதனை படைத்த சிறுவனை, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழை வழங்கினார். இதேபோல் அந்த சிறுவனின் தனித்திறனை ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

Next Story