ஊட்டியில் தங்கும் விடுதி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டதால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வாகனங்களில் ஊட்டிக்கு வருகிறார்கள். மாவட்ட எல்லையான பர்லியார், குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளில் வயதானவர்கள், அறிகுறி தென்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் ஓரிரு நாட்கள் ஊட்டியில் தங்கி இருந்து பூங்காக்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் சரியான முறையில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்கும் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் வரவேற்பாளர்கள், ஊழியர்கள், சுத்தம் செய்யும் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் எண்கள் பெறப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 14-ந் தேதி 3 ஆயிரத்து 163 பேர், 15-ந் தேதி 5,016 பேர், 16-ந் தேதி 3 ஆயிரத்து 884 பேர், 17-ந் தேதி 2,320 பேர் வருகை தந்து உள்ளனர். அவர்கள் பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து பூங்காவை கண்டு ரசிப்பதோடு, பலர் முககவசம் அணியாமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதையடுத்து பூங்கா பணியாளர்கள் ரோந்து கண்காணித்து வருவதுடன், முககவசம் அணியாத சுற்றுலா பயணிகளை முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்தால் விசிலடித்து கூட்டமாக நிற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story