கோவை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் 31 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கோவை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் 31 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2020 6:23 AM GMT (Updated: 19 Nov 2020 6:23 AM GMT)

கோவை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 31 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கோவை, 

கோவையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதால் குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனைதொடர்ந்து நீர்நிலை ஆ க்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் படிப்படியாக இடித்து அகற்றி வருகின்றனர்.

கோவை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் நொய்யல் ஆறு மற்றும் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜாவாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.

இந்த நிலையில் இங்குள்ள பெரியசாமி வீதியில் 36 வீடுகள் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இங்கு இருந்த குடும்பங்கள் வீடுகளை காலி செய்து விட்டு அரசு ஒதுக்கிய குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில் 31 வீடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மீதம் உள்ள 5 வீடுகளும் விரைவில் இடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை இடிக்கும் பணி நேற்றும் நடைபெற்றது. இதில் குமரசாமி காலனியில் இருந்த வீடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story