சிறுமுகை அருகே மின் வேலியில் சிக்கி காட்டுயானை பரிதாப சாவு
சிறுமுகை அருகே மின்வேலியில் சிக்கி காட்டுயானை பரிதாபமாக இறந்தது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையையொட்டி உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி உணவு, தண்ணீர்த்தேடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் சிறுமுகையை அடுத்து பெத்திகுட்டை அருகே தேரன்கிணறு கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பரமன் (வயது 85) விவசாயி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இவரது நிலத்தின் ஒரு பகுதியில், அவரது கடைசி மகன் முருகேசன் வாழை பயிரிட்டு இருந்தார். நேற்று முன்தினம் உணவுத்தேடி வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை விவசாயி முருகேசனின் தோட்டத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது.
பின்னர் அங்கிருந்து யானை சென்றபோது, தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் காட்டு யானை சிக்கியது. இதில் யானை மீது மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர், சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை பார்வையிட்டனர்.யானை இறந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. இதனைத்தொடர்ந்து அங்கு பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசு வன கால்நடை மருத்துவர் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அந்த பகுதிலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் விவசாயி முருகேசன் தலைமறைவாகி விட்டார்.
தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், தோட்டத்திற்குள் வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க விவசாயி முருகேசன் மின்வேலியில் வீட்டுக்கு பயன்படுத்தும் மின்சாரத்தை ஒரு கருவி மூலம் பாய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த முருகேசனை போலீசார் வலைவீசி தேடினர். அவர் கிடைக்காததால், அவரது சகோதரர்களை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். ஆனால் அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்தனர்.
தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஊர் முக்கிய பிரமுகர், விவசாயி முருகேசனை சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அவரது சகோதரர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து விவசாயி முருகேசனை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story