28 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிக்கரையில் கட்டிடங்கள் சேதம் - மரங்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன
28 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், குற்றாலம் அருவிக்கரையில் உள்ள கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மலைப்பகுதியில் இருந்து ஏராளமான மரங்களும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டன.
தென்காசி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவிலும் கனமழை கொட்டியது. இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் காலையில் மழை குறைந்து, சாரல் மழை அவ்வப்போது பெய்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது.
குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, மலையில் இருந்து ஏராளமான மரங்கள் அடித்து வரப்பட்டன. அவை விழுந்ததில், குற்றாலம் மெயின் அருவிக்கரையில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த உடை மாற்றும் கட்டிட சுவர் இடிந்து விழுந்தது.
இதேபோன்று பழைய குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் அங்குள்ள கழிப்பறை கட்டிடம் அருகில் உள்ள கான்கிரீட் தளம் பெயர்ந்து அடித்து செல்லப்பட்டு பள்ளமாக காட்சி அளித்தது.
அங்கு அருவிக்கரையில் இருந்த இரும்பு தடுப்புகளும் அடித்து செல்லப்பட்டு, சிறிது தூரத்தில் கரை ஒதுங்கி கிடந்தன. அருவிக்கரைகளில் மண் குவியலாகவும், பாறாங்கற்களாகவும் சிதறிக் கிடந்தன.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, பழைய குற்றாலத்தில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியிலும் தண்ணீர் குளம்போன்று தேங்கி கிடந்தது. தென்காசி யானை பாலம் சிற்றாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போதும், குற்றாலம் அருவிக்கரைகளில் இருந்த கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதேபோன்று 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story