பரமத்திவேலூர் அருகே, பலத்த மழைக்கு அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


பரமத்திவேலூர் அருகே, பலத்த மழைக்கு அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 19 Nov 2020 4:30 PM IST (Updated: 19 Nov 2020 4:38 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் பலத்த மழைக்கு அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி திறக்கப்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த பள்ளிகளின் சுற்றுச்சுவர் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக பள்ளியின் உட்புறத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் சாலையில் செல்வோருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த தகவல் அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதேபோல் பரமத்திவேலூர் அருகே சோழசிராமணி சிறுநல்லிக்கோவில் பகுதியில் பழனியம்மாள் என்பவது வீட்டின் மேற்கூரை பலத்த மழைக்கு இடிந்து விழுந்தது. பரமத்தியில் ரவி என்பவரது வீட்டின் முன்பக்க அறை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த இரு வீடுகளிலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4,100 நிவாரணத்தொகை வழங்க நாமக்கல் கலெக்டர் மெகராஜ் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி ஆகியோர் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டனர்.

Next Story