மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டினால் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது
மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டினால் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு, அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.
பெரம்பலூர்,
தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர உள் ஒதுக்கீடு வழங்கலாம் என தமிழக அமைச்சரவை சட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இச்சட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடந்த கலந்தாய்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 2 மாணவிகளுக்கும், 3 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர உள் ஒதுக்கீட்டின் தகுதிபெற்ற பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி அபிதாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியிலும், மாணவர்களான ஜெயசூர்யாவுக்கு மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும், கே.கார்த்திக்கேயனுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியிலும், பேரளி அரசு பள்ளியில் பயின்ற மாணவி ராதா, மாணவர் மணிகண்டன் ஆகியோருக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. இதில் அபிதா என்ற மாணவி முதன்முறையாக எழுதிய ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவப்படிப்பில் சேர உள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 5 மாணவ-மாணவிகளுக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதே போல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் கலந்தாய்வில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓகளூர் அரசு பள்ளியில் பயின்ற மாணவர் கார்த்திக், பெரம்பலூர் அரசு பள்ளியில் பயின்ற மாணவர் ஆர்.கார்த்திக்கேயன், செட்டிகுளம் அரசு பள்ளியில் பயின்ற மாணவர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அம்மாபாளையம் அரசு பள்ளியில் பயின்ற மாணவி காவ்யா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
Related Tags :
Next Story