வாணியம்பாடி அருகே, மினிவேன் - மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் பலி - 3 பேர் படுகாயம்
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன்மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
வாணியம்பாடி,
ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் இருந்து மினிவேன் ஒன்று தக்காளி ஏற்றி வருவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. சேகர் (வயது 45) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். செய்யாறு பகுதியை சேர்ந்த குணசேகரன் (32), முருகன் ஆகியோர் வேனில் பயணம் செய்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி என்ற இடத்தில் சென்றபோது, வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ் (26), நடுப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ் (20), பெத்தவேப்பம்பட்டை கிராமத்தை சேர்ந்த சங்கர் (26) ஆகிய 3 பேரும் மோட்டார்சைக்கிளில் எதிரே வந்தனர்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். வேனில் பயணம் செய்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். வேன் டிரைவர் சேகர் மற்றும் முருகன் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஆகாஷ் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மோட்டார்சைக்கிளில் வந்த தினேஷ், மினிவேன் டிரைவர் சேகர், முருகன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story