தேவகோட்டை அருகே, அசுர வேகத்தில் வந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது; 6 பேர் உயிர் தப்பினர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
தேவகோட்டை அருகே அசுர வேகத்தில் வந்த கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே மொட்டையன் வயல் கிராமத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் இருந்து ஒரு காரில் 6 வாலிபர்கள் வந்தனர். அங்கு நண்பனின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் காரைக்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அசுர வேகத்தில் வந்த கார் தேவகோட்டை அருகே உஞ்சனை என்ற இடத்தில் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 2 பேர் காரின் ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.
பின்னர் மற்ற 4 பேரும் ஒவ்வொருத்தராக வெளியே வந்தனர். அதில் ஒரு இளைஞர் காரின் டிக்கி வழியாக பின்புறமாக வெளியே வருகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த கார் விபத்தில் சிக்கிய 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் இருந்து வெளியே வந்த வாலிபர்கள் கிராம மக்களின் உதவியோடு குப்புற கிடந்த காரை நிமிர்த்து அதே காரில் மீண்டும் காரைக்குடிக்கு சென்றனர். இந்த விபத்தின் போது சாலையில் எவ்வித வாகனமும் வராததால் அசாம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. இந்த விபத்து சம்பவ வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, காரில் வந்த 6 பேரும் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர். கார் கவிழ்ந்த விபத்தில் எவ்வித உயிர்சேதமும் இல்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். காரில் வந்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்தார்களா என விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது, இந்த விபத்து குறித்து எங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றனர்.
Related Tags :
Next Story