மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் தொடர் மழை கொடுமுடி பகுதியில் கொட்டித்தீர்த்தது + "||" + The continuous rain in the district poured over the Kodumudi area

மாவட்டத்தில் தொடர் மழை கொடுமுடி பகுதியில் கொட்டித்தீர்த்தது

மாவட்டத்தில் தொடர் மழை கொடுமுடி பகுதியில் கொட்டித்தீர்த்தது
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை கொடுமுடி பகுதியில் கொட்டித்தீர்த்தது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் தொடர்ந்த மழை நேற்று காலையில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருந்தது. அவ்வப்போது விட்டு விட்டு இந்த மழை தொடர்ந்தது. இதனால் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை உள்ளிட்ட ஓடைகள் ஆறுகள் போல பாய்ந்து வருகிறது. ஈரோடு எல்லப்பாளையம்ரோடு தட்டான்காடு குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனிராவுத்தர்குளம் கொங்கு வேலா நகரிலும் மழைநீர் தேங்கியது.

கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை பெய்யாத அளவுக்கு கடந்த 2 நாட்களாகவே விடாமல் மழை பெய்து வருகிறது.

ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய பலத்த மழை நேற்று மதியம் வரை நிற்காமல் பெய்தது. அதன்பின்னரும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

இதனால் மஞ்சள், வாழை தோட்டங்களிலும், நெல் வயலிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மொடக்குறிச்சி பகுதியில் இருந்து கொடுமுடி காவிரி ஆற்றை நோக்கி செல்லும் குரங்கன் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொம்பனைப்புதூரில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் மேற்பகுதியில் செல்லும் குரங்கன் ஓடையில் தண்ணீர் சீறிப் பாய்ந்து சென்றது.

இதேபோல் பவானியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 40 நிமிடம் பலத்த மழையாக நீடித்தது. இதனால் ரோடுகளின் இரு புறமும் மழை தண்ணீர் வழிந்தோடியது. தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டர் அளவில்) விவரம் வருமாறு:

கொடுமுடி - 51.4

குண்டேரிபள்ளம் - 20

சென்னிமலை - 19

வரட்டுப்பள்ளம் - 12.4

மொடக்குறிச்சி - 10

கவுந்தப்பாடி - 9

பவானிசாகர் - 7.4

ஈரோடு - 7

தாளவாடி - 6

நம்பியூர் - 6

கொடிவேரி - 5.2

பெருந்துறை - 5

எலந்தகுட்டைமேடு - 5

அம்மாபேட்டை - 4.4

பவானி - 3.8

கோபி - 3.4

சத்தியமங்கலம் - 3

மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.

நேற்று மாலையிலும் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் முற்றிலும் குறைந்து குளு குளு காலநிலை தொடங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2 நாட்களாக குளிர்காற்று வீசுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. அதே நேரம் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் தொடர் மழை பெய்வது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.