மும்பையில் ‘கராச்சி’ என்ற இனிப்பு கடையின் பெயரை மாற்ற வேண்டும் சிவசேனா பிரமுகர் வலியுறுத்தியதால் பரபரப்பு


மும்பையில் ‘கராச்சி’ என்ற இனிப்பு கடையின் பெயரை மாற்ற வேண்டும் சிவசேனா பிரமுகர் வலியுறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 10:27 PM GMT (Updated: 19 Nov 2020 10:27 PM GMT)

மும்பையில் ‘கராச்சி‘ என்ற இனிப்பு கடையின் பெயரை மாற்ற வலியுறுத்திய சிவசேனா பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மும்பை பாந்திரா பகுதியில் ‘கராச்சி ஸ்வீட்ஸ்‘ என்ற பெயரில் இனிப்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற சிவசேனாவை சோ்ந்த பிரமுகர் நிதின் நந்காவ்கர் கராச்சி என்பது பாகிஸ்தானில் உள்ள நகரம் என்பதால் இனிப்பு கடையின் பெயரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் இனிப்பு கடையின் பெயர் பலகையை பேப்பரால் மறைத்தார்.

இதுகுறித்து நிதின் நந்காவ்கர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடை உரிமையாளரிடம் அவர், “ மும்பையில் கராச்சி என்ற பெயரை பயன்படுத்தாதீர்கள். கராச்சி என்ற பெயருடன் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. பாய் தூஜ் அன்று நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நாடு. எனவே 15 நாட்களுக்கு கடையின் பெயரை மாற்ற வேண்டும் “ என கூறுகிறார்.

சிவசேனா விளக்கம்

இந்த விவகாரத்தில் சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் சிவசேனாவை விமர்சித்தனர். இதையடுத்து இனிப்பு கடையின் பெயரை மாற்ற சொன்னது சிவசேனாவின் கோரிக்கை கிடையாது என அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டார்.

அதில் அவர், “கராச்சி பேக்கரி மற்றும் இனிப்பு கடை கடந்த 60 ஆண்டுகளாக மும்பையில் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே தற்போது அந்த பெயரை மாற்ற சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. கடையின் பெயரை மாற்ற கூறியது சிவசேனா கட்சியின் அதிகார பூர்வ நிலைப்பாடு அல்ல“ என்று தெரிவித்து உள்ளார்.

Next Story