காட்டு யானை தாக்கி வீடு இடிந்தது; விவசாயி பலி மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி


காட்டு யானை தாக்கி வீடு இடிந்தது; விவசாயி பலி மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 19 Nov 2020 11:11 PM GMT (Updated: 19 Nov 2020 11:11 PM GMT)

எச்.டி.கோட்டை அருகே காட்டு யானை வீட்டை இடித்து தள்ளியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா நெட்டகல்லஉண்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை கும்பல் ஒன்று நெட்டகல்லஉண்டி கிராமத்திலும், விளைநிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

ஏராளமான வீடுகளையும் அந்த காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. இதனால் பீதியில் உள்ள அந்தப்பகுதி மக்கள், காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். வனத்துறையினரும் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

விவசாயி சாவு

இந்த நிலையில் நேற்று அதிகாலை காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து நெட்டகல்லஉண்டி கிராமத்துக்குள் புகுந்தது. அந்த யானை கிராமத்துக்குள் ஹாயாக உலா வந்தது. இந்த நிலையில், அந்த காட்டு யானை அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி சின்னப்பா (வயது 58) என்பவரின் வீட்டை தும்பிக்கையால் இடித்து தள்ளியது. அப்போது வீட்டுக்குள் சின்னப்பா மற்றும் அவருடைய மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

காட்டு யானை வீட்டை இடித்து தள்ளியதில், சுவரின் இடிபாடுகளிடையே அவர்கள் 2 பேரும் சிக்கிக் கொண்டனர். இதில் சின்னப்பா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடைய மனைவி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

சோகம்

இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய சின்னப்பாவின் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் எச்.டி.கோட்டை வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், சுவரின் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்த சின்னப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எச்.டி. கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story